சிறப்பு அனுபவம் பெற்றவர்கள் தான் மலைப் பகுதிகளில் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மலைப் பகுதிகளில் சிறப்பு அனுபவம் பெற்றவர்கள் தான் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று நிலைதடுமாறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்கள்கூட ஆகாத நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் - கோத்தகிரி செல்லும் வழியில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளாகி 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வந்துள்ள செய்தி என்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மேற்படி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பொதுவாக மலைப் பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு தனி அனுபவம் தேவை. இவ்வாறு சிறப்பு அனுபவம் பெற்றவர்கள் தான் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை இனி வருங்காலங்களில் அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மேற்படி விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், இலேசான காயமுற்றவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்று தி.மு.க. அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.