ஜெய்பீம் தொடர்பான வழக்கு: ஆதிக்க சக்திகளின் முயற்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி - கே.பாலகிருஷ்ணன்
நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை அச்சமின்றி தயாரிக்கும் சூழல் நிலவ வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த உயர் நீதிமன்றம் ஜெய்பீம் தொடர்பான வழக்கினை ரத்து செய்துள்ளது வரவேற்கதக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"ஜெய்பீம் திரைப்படம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றியடைந்தது. அதனால் ஆத்திரமடைந்த சாதிய, வகுப்புவாத சக்திகள், திரைப்பட குழுவின் மீது குற்ற வழக்கு பதிவு செய்தார்கள். அதற்கு காரணமாக சொல்லப்பட்ட ஒரு காலண்டர் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட அவர்களின் ஆத்திரம் அடங்கவில்லை. படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா என எல்லோர் மீதும் வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.
இந்த நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த உயர் நீதிமன்றம் ஜெய்பீம் தொடர்பான வழக்கினை ரத்து செய்துள்ளது வரவேற்கதக்கது. நல்ல கதையம்சம் கொண்ட, மனித உரிமைகளை உயர்த்திப்பிடிக்கும் திரைப்படங்களை அச்சமின்றி தயாரிக்கும் சூழல் நிலவ வேண்டும். அதற்கு எதிரான ஆதிக்க சக்திகளின் முயற்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.