நாகர்கோவில் ரெயில் மோதி பலி: 15 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் உடல்


நாகர்கோவில் ரெயில் மோதி பலி: 15 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் உடல்
x

கோப்புப்படம் 

ரெயிலின் முன்பகுதியில் வாலிபரின் உடல் சிக்கிய நிலையில் இழுத்து வரப்பட்டதை ரெயில்வே அதிகாரி கவனித்து அதிர்ச்சி அடைந்தார்.

திருமங்கலம்,

சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா ரெயில் நேற்று காலை மதுரை வந்தது. பின்னர் விருதுநகர் நோக்கி சென்றபோது, திருமங்கலம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ரெயில் மோதி அவர் உயிரிழந்தார். மேலும் ரெயிலின் முன்பகுதியில் வாலிபரின் உடல் சிக்கிக்கொண்டது. ஆனால், இதை ரெயில் என்ஜின் டிரைவர் கவனிக்கவில்லை.

ஆனால், அந்த ரெயில் திருமங்கலம் நிலையத்தை கடந்தபோது, ரெயிலின் முன்பகுதியில் வாலிபரின் உடல் சிக்கிய நிலையில் இழுத்து வரப்பட்டதை அங்கு பணியில் இருந்த ரெயில்வே அதிகாரி கவனித்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கள்ளிக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தகவல் கொடுத்து, அந்தியோதயா ரெயிலை கள்ளிக்குடியில் நிறுத்தினர். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு ரெயிலின் முன்பகுதியில் சிக்கி இருந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

இதையடுத்து அந்த வாலிபரின் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தியோதயா விரைவு ரெயில் அரை மணி நேர தாமதத்திற்கு பின்பு, கள்ளிக்குடி நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே ரெயிலில் சிக்கி உயிரிழந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருமங்கலம் அருகே உள்ள கற்பகநகரை அடுத்த ஆறுமுகம் 2-வது தெருவை சேர்ந்த முருகன்(வயது 36) என்று ெதரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் மோதி இறந்த வாலிபரின் உடல் கிட்டத்தட்ட சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் என்ஜினின் முன்பகுதியில் தொங்கிய நிலையில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story