கன்றுக்குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை புலி: 3-வது நாளாக வனத்துறையினர் தேடுதல் வேட்டை


கன்றுக்குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை புலி:  3-வது நாளாக வனத்துறையினர் தேடுதல் வேட்டை
x

கன்றுக்குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை புலியை 3-வது நாளாக வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கரூர்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே அத்திப்பாளையம் பகுதியில் விவசாயிகள் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளை கடந்த 16-ந்தேதி இரவு மர்மவிலங்கு ஒன்று கடித்து கொன்றது. மேலும் சில ஆடுகளை மர்மவிலங்கு கடித்ததில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து மறுநாள் 17-ந்தேதி காலை கரூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மர்மவிலங்கு சென்ற கால்தடத்தை ஆய்வு செய்தனர். அப்போது அது மர்மவிலங்கு அல்ல சிறுத்தைப் புலி தான் என்று உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் இருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் மேற்கண்ட பகுதியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைத்து சிறுத்தைப் புலியை பிடிக்க முயற்சி செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அத்திப்பாளையம் வந்து சிறுத்தைப்புலி கடித்து படுகாயம் அடைந்த ஆடுகளை பார்வையிட்டார். மேலும் சிறுத்தை புலி சென்ற கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் வல்லாகுளத்துபாளையம் பகுதியில் கன்றுக்குட்டி ஒன்றை சிறுத்தை புலி கடித்து கொன்று இழுத்து சென்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூா் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுத்தை புலி வந்து சென்ற கால்தடத்தை ஆய்வு செய்தனர். இதையடுத்து நேற்று 3-வது நாளாக வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துைறயினா் அத்திப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வயல்பகுதிகளில் சிறுத்தை புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் பரபரப்பு நிலவுகிறது. மேலும், சிறுத்தைபுலி நடமாட்டத்தால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story