ரெயில்வே இடத்தில் கட்டப்பட்ட 515 வீடுகளை காலிசெய்ய நோட்டீசு: முதல்- அமைச்சர் மூலமாக மத்திய மந்திரியிடம் வலியுறுத்துவோம்; பொதுமக்களிடம் கருத்து கேட்ட அமைச்சர் சு.முத்துசாமி உறுதி


ரெயில்வே இடத்தில் கட்டப்பட்ட 515 வீடுகளை காலிசெய்ய நோட்டீசு: முதல்- அமைச்சர் மூலமாக மத்திய மந்திரியிடம் வலியுறுத்துவோம்; பொதுமக்களிடம் கருத்து கேட்ட அமைச்சர் சு.முத்துசாமி உறுதி
x

ரெயில்வே இடத்தில் கட்டப்பட்ட 515 வீடுகளை காலி செய்ய நோட்டீசு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கருத்து கேட்டார். அப்போது அவர் முதல்- அமைச்சர் மூலமாக மத்திய ரெயில்வே மந்திரியிடம் வலியுறுத்துவோம் என்று உறுதி அளித்தார்.

ஈரோடு

ஈரோடு

ரெயில்வே இடத்தில் கட்டப்பட்ட 515 வீடுகளை காலி செய்ய நோட்டீசு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கருத்து கேட்டார். அப்போது அவர் முதல்- அமைச்சர் மூலமாக மத்திய ரெயில்வே மந்திரியிடம் வலியுறுத்துவோம் என்று உறுதி அளித்தார்.

நோட்டீசு

ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள 515 வீடுகளை அகற்ற வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வருவதால் அங்கேயே தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் ஈரோட்டில் நடத்தப்பட்டது. இதில் சேலம் ரெயில்வே கோட்ட உதவி மேலாளர் சிவலிங்கம் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஓரிரு மாதங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்ததுடன், மாற்று இடம் கேட்டு மாநில அரசிடம் அணுகுமாறு தெரிவித்தார்.

இந்தநிலையில் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு சாஸ்திரி நகர் முத்துமாரியம்மன் கோவில் திடலில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பெரும்பள்ளம் ஓடையோரமாக வசித்து வந்தோம். அங்கு மழை வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக எங்களுக்கு சாஸ்திரிநகர் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு இங்கு வசித்து வருகிறோம். தற்போது திடீரென வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். பல்லாயிரம் பேர் இந்த பகுதியை விட்டு உடனே எங்கு செல்வது? குழந்தைகளின் கல்வி, எங்களுடைய வேலை என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு இதே பகுதியில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது கூறியதாவது:-

மாற்று வழி

இந்த இடம் ரெயில்வேக்கு சொந்தமானது என்பதால் அவர்கள் மீண்டும் கேட்கிறார்கள். எனவே அவர்களிடம் இந்த இடத்தில் குடியேறுவதற்கு பணம் கொடுக்கிறோம் என்று கேட்டு பார்க்கலாம். அதற்கு நாம் தயாராக வேண்டும். இந்த பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்வதற்கு நோட்டீசு வினியோகம் செய்தபோது எனக்கு உடனே தகவல் கிடைத்தது.

உடனடியாக தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியத்திடம் கூறி ரெயில்வே அதிகாரிகளை சந்திக்க செய்து உடனடியாக வீடுகளை அகற்ற கூடாது என்றும், மாற்று வழி ஏற்பாடு செய்த பிறகுதான் காலி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

கோர்ட்டு

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும் நான் பேசி உள்ளேன். அவர் ரெயில்வே அதிகாரிகளிடம் பேசி உள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த இடம் இருப்பதால் நமது அதிகாரிகளை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. எனவே ரெயில்வே மத்திய மந்திரியிடம் கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம். இது ஒரு முயற்சியாக இருந்தாலும், கோர்ட்டு மூலமாக தீர்வு காணலாமா? என்று மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதேசமயம் கோர்ட்டுக்கு நாம் செல்லும்போது எந்த வகையான தீர்ப்பும் வரலாம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றாலும், பொதுமக்கள் ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரிகளிடமும், மூத்த வக்கீல்களிடம் ஆலோசனை செய்து உரிய முடிவு எடுக்கலாம்.

முதல்-அமைச்சர்

இந்த பிரச்சினையை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம். நாம் அனைவரும் கைகோர்த்து இணைந்து செயல்பட்டால் இந்த பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பை வாங்கி கொடுக்க முடியும். சாஸ்திரி நகரில் அனைத்து வீடுகளையும் காப்பாற்றி கொடுப்பதுதான் எங்களுடைய நோக்கம். இதுதொடர்பாக அனைத்து அதிகாரிகளிடமும் பேசுவோம் எம்.பி.க்கள் மூலமாக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்துவோம்.

தமிழக முதல்-அமைச்சர் மூலமாக மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடிதம் அனுப்பி வலியுறுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வோம். ரெயில்வே நிர்வாகம் எந்த நிலையில் உள்ளது என்பதை பொதுமக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரி நகர் பகுதியிலும், கட்டபொம்மன் வீதியிலும் கழிவுநீர் தேங்குவதை தடுக்க கால்வாயை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியது. அப்போது அது ரெயில்வேக்கு சொந்தமான இடம் என்று அந்த பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே நாம் உரிய பணத்தை செலுத்தி இந்த இடத்தை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபடலாம். இந்த பகுதியில் பலர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வீடுகளை கட்டியிருக்கிறார்கள். எனவே அனைவரும் ஒருமனதாக செயல்பட்டு இடத்தை மீட்க வேண்டும்.

உறுதி

தவறான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் இந்த இடத்தை மீட்பது தொடர்பாக அதிகாரிகளின் மனது புண்படாத வகையில் நம்பிக்கையுள்ள செய்தியை மட்டும் பதிவிட வேண்டும்.

இந்த பிரச்சினையை தீர்வு காண பொதுமக்கள் இணைந்து 10 பேரை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அதிகாரிகளை சந்தித்து பேசுவதற்கு எளிதாக இருக்கும். உறுதியாக இந்த இடத்தை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், தாசில்தார் பாலசுப்பிரமணியம், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story