ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, ஈரோடு ரெயில்வே காலனி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தின் சார்பில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கூடத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கடும் நடவடிக்கை
முன்னதாக அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
போதைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு பிரசாரம் வருகிற 19-ந்தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நடைபெறும். 240 அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த 60 ஆயிரம் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவைகள் நடைபெறுகின்றன. மேலும் தனியார் பள்ளிக்கூடங்களிலும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறும்.
போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். மாவட்ட எல்லைகள், சோதனைச்சாவடிகள், பஸ், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும். இதுவரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களுக்கு தனியார் பங்களிப்புடன் மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
முதல்-அமைச்சர் வருகை
மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பது அரசின் கொள்கை. அரசு பள்ளிக்கூடங்கள் அருகில் மதுக்கடைகள் இருந்தால் அவைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார்.
சுமார் 85 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டிவைத்து, 65 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார். பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் நாளை (அதாவது இன்று) காலை 8 மணிக்கு அணையில் இருந்து வழக்கம்போல் தண்ணீர் திறந்து விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.