தாய், 2 மகள்கள் தூக்குப்போட்டு தற்கொலை


தாய், 2 மகள்கள் தூக்குப்போட்டு தற்கொலை
x

அஞ்சுகிராமம் அருகே உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தாய், 2 மகள்கள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தாய், 2 மகள்கள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கணவர் உயிரிழப்பு

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 51). இவருடைய மனைவி அனிதா (45). இவர்களுக்கு சகாய திவ்யா (19) மற்றும் சகாய பூஜா மவுலிகா (16) என்ற 2 மகள்கள் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏசுதாசன் வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவரது உடல்நிலை மோசமாகி திடீரென இறந்து விட்டார்.

அதன் பிறகு மனைவி அனிதாவும், 2 மகள்கள் மட்டும் சொந்த ஊரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். மூத்த மகள் சகாய திவ்யா ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி 2-ம் ஆண்டு படித்து வந்தார். சகாய பூஜா மவுலிகா அழகப்பபுரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்தார்.

வருமானம் இன்றி தவிப்பு

கணவனை நம்பி மட்டுமே வருமானம் இருந்த நிலையில் அவர் இறந்ததால் அனிதா மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய மகள்களை பாசமாக வளர்த்து வந்தார்.

மகள்களை படிக்க வைக்கவும், அன்றாட வாழ்க்கையை நடத்தவும் கூலி வேலைக்கு சென்று வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பண நெருக்கடியும் உருவானது. இதுதொடர்பாக அனிதா, தனது 2 மகள்களிடமும் மனம் விட்டு பேசியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் அனிதாவின் மகள்கள் இருவரும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். பின்னர் இரவில் சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்றனர்.

தாய்-மகள்கள் தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலையில் அனிதா வீட்டுக்கு அவரது உறவினரான பரப்புவிளையை சேர்ந்த பத்மா என்பவர் வந்தார். ஆனால் வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அனிதாவின் செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் அவர் நீண்ட நேரமாக வீட்டு கதவை தட்டியும் உள்ளே இருந்து யாரும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பத்மா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தார். அப்போது அவர்கள் கண்ட காட்சி பதற வைத்தது.

வீட்டில் உள்ள ஒரு அறையில் அனிதா மற்றும் அவரது மகள்களான சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இந்த உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

மேலும் இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதே சமயத்தில் தாய், 2 மகள்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தற்கொலைக்கு முன்பு ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளார்களா? என வீட்டில் உள்ள அறை முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்.

அப்போது அனிதா எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், "எனது (அனிதா) உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எனது 2 மகள்களையும் ஒரு தாயார் என்ற முறையில் சரியாக கவனிக்க முடியவில்லை. மேலும் பண பிரச்சினையும் ஏற்பட்டதால் மன உளைச்சல் அதிகமானது. இதனால் நானும் எனது மகள்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இறந்த நிலையில் பணப் பிரச்சினை காரணமாக வாழ்க்கை நடத்த முடியாததால் தாய், 2 மகள்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கதறி அழுத தோழிகள்

சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா தற்கொலை செய்த தகவலை அறிந்ததும் அவர்களுடன் படிக்கும் சக மாணவிகள் துடிதுடித்து போனார்கள். உடனே சம்பவ இடத்துக்கு பதறியடித்தபடி ஓடி வந்தனர். தங்களுடன் நன்றாக சிரித்து பேசி பழகி சுற்றி திரிந்த தோழிகள் இப்போது கண்முன்னே அசைவற்று பிணமாக கிடக்கிறார்களே என அவர்கள் கதறி அழுதனர். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

சாவதற்கு முன்பு நாய்க்கு உணவு அளித்த அனிதா

தெரு நாய் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு அனிதா வீட்டு முன்பு நின்று குரைத்துள்ளது. உடனே அவர் வெளியே வந்து அந்த நாய்க்கு பிஸ்கெட்டுகளை உணவாக அளித்துள்ளார். இது தான் அக்கம் பக்கத்தினர் அனிதாவை கடைசியாக பார்த்தது. அதன்பிறகு மறுநாள் காலையில் அவர் தன்னுடைய மகள்களுடன் தற்கொலை செய்த கோர காட்சியை தான் பார்க்க முடிந்ததாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் நள்ளிரவுக்கு பிறகு தான் 3 பேரும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்கொலை முடிவுக்கு 2 மகள்களை சம்மதிக்க வைத்த தாய்

அனிதாவிற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவர் வேலைக்கு செல்லாததால் பண கஷ்டமும் உருவானது. இதனை ஈடுகட்ட நகையை வங்கியில் அடமானம் வைத்து அதில் கிடைத்த பணம் மூலம் ஒவ்வொரு நாளையும் சமாளித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கும், கல்வி செலவுக்கும், குடும்பம் நடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அனிதா வாழ்க்கையில் வெறுப்புற்று உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அதே சமயத்தில் தான் இறந்த பிறகு தன்னுடைய 2 மகள்களும் அனாதையாகி விடுவார்களே? என்ற அச்சமும் ஏற்பட்டது. இதனால் 2 மகள்களையும் உடன் அழைத்துச் செல்லும் கனத்த முடிவை அவர் எடுத்தார்.

மேலும் தனது எண்ணத்தையும் 2 மகள்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். முதலில் தயங்கிய அவர்கள், தாயின் நீண்ட மன போராட்டத்திற்கு பிறகு தற்கொலை முடிவிற்கு சம்மதித்துள்ளனர். பின்னர் 3 பேரும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். முதலில் மகள்கள் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த பிறகு கடைசியாக அனிதா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.Next Story