மளிகை கடையில் உப்பு மூட்டைகளை திருடிய மர்மநபர்கள்
அய்யலூரில் மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
அய்யலூர் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் அன்பரசன் (வயது 30). இவர் கடந்த 9-ந்தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரது கடைக்கு வெளியே உப்பு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் மறுநாள் காலை அன்பரசன் கடைக்கு சென்றார். அப்போது கடையின் முன்புறம் வைத்திருந்த உப்பு மூட்டைகளை காணவில்லை. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது இரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர், கடையின் முன்பு இருந்த உப்பு மூட்டைகளை திருடி மொபட்டில் ஏற்றிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொதுவாக உப்பை யாரும் திருட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் கடைகளில் உப்பு மூட்டைகளை கடைக்கு வெளியே வைத்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது உப்பு மூட்டைகளையே திருடும் சம்பவம் நடந்துள்ளதால் அய்யலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.