2023-ம் ஆண்டில் புதிய சாதனை: சென்னை மண்டலத்தில் 5 லட்சம் பாஸ்போர்ட் வினியோகம்


2023-ம் ஆண்டில் புதிய சாதனை: சென்னை மண்டலத்தில் 5 லட்சம் பாஸ்போர்ட் வினியோகம்
x

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு (2023) 5 லட்சம் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு (2023) 5 லட்சம் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2018-ம் ஆண்டு 4 லட்சத்து 83 ஆயிரம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பாக போலீஸ் நிலையத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என காவல்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சென்னை நகரை பொறுத்தமட்டில் இந்த ஆய்வுக்கு 8 முதல் 10 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 3 முதல் 4 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் இந்த ஆய்வுக்கு 14 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 7 முதல் 8 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் சென்னை சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் செயல்படும் பாஸ்போர்ட் மையங்களில் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம்.

2023-ம் ஆண்டு 20 ஆயிரம் விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் தொடர்பான குறைகள் செல்போன், இ-மெயில், வாட்ஸ் அப், டுவிட்டர், ஸ்கைப் போன்றவற்றின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story