பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
பயங்கரவாத அமைப்புக்கு நிதி, ஆட்கள் சேர்ந்த வழக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர்.
சென்னை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, நீடூரை சேர்ந்த சாதிக் பாஷா என்ற நபர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார். போலீசாரை சாதிக் பாஷா துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து போலீசாரை மிரட்டிய நீடூரை சேர்ந்த் சாதிக் பாஷா, ஜஹபர்அலி, கோவையை சேர்ந்த முகமது ஆசிக், காரைக்காலை சேர்ந்த முகமது இர்பான், சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரகமத் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதனை தொடந்து, இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களின் உறவினர்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், எலந்தங்குடி, அரிவேலூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இது போல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சுண்ணாம்பு கார வீதியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை சம்பவங்களால் அப்பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.