லாபத்துக்காக கூட்டணி வைக்கவில்லை;மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேச்சு


லாபத்துக்காக கூட்டணி வைக்கவில்லை;மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேச்சு
x

லாபத்துக்காக கூட்டணி வைக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

ஈரோடு

லாபத்துக்காக கூட்டணி வைக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வீதி வீதியாக பிரசாரம் செய்தார். கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பிரசாரத்தை தொடங்கிய அவர் சூரம்பட்டி நால்ரோடு, சம்பத்நகர், பி.பி.அக்ரகாரம் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் அவர் பேசியதாவது:-

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் ஓட்டு வாங்குவதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். என்ன வேற சின்னத்தில்வாக்கு கேட்கிறீங்க என்று கேட்டால், நாட்டுக்கு ஆபத்து என்று வரும்போது சின்னம் எல்லாம் தாண்டி யோசிக்க வேண்டியது இருக்கிறது. அதை நன்றாக யோசித்து விட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். உணர்வு பூர்வமாக எனக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் உறவு இருக்கிறது. இவர் பெரியாரின் பேரன். பெரியாரே ஒத்துக்கொள்ளாவிட்டாலும் நான் அவருடைய பேரன். அந்தஅளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான். எனது அப்பா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தந்தையின் ரசிகர். இந்த தொடர்பு எல்லாம் எனக்கு இருக்கிறது. நான் இங்கே வருவதற்கு அதுமட்டும் காரணம் இல்லை.

தன்மானம்

இந்த கூட்டணி இப்போது எதற்கு வைக்கிறீர்கள். என்ன லாபத்துக்காக என்று கேட்டால், நான் லாபத்தை எண்ணி அரசியலுக்கு வரவில்லை. எனக்கு தேவையான லாபத்தை நீங்கள் என் தொழிலில் ஈட்டித்தந்து இருக்கிறீர்கள். ஆக, நான்வந்தது என் கடமையை செய்வதற்காக. இந்த நாட்டிற்கான கடமையை செய்வதற்காக. தவிர, இது தமிழர்கள் தன்மானத்தை நிரூபிக்க வேண்டிய தேர்தல். அதில் நிரூபிக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக போராடுகிறோம்.

நாங்கள் முன்னணி போராளிகள். அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முக்கியமானவர். உங்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று நீங்கள் உணர வேண்டும். எங்களை அடக்கி ஆள முடியாது என்று தமிழகம் இப்போது இருக்கும் மையத்துக்கு (மத்திய அரசுக்கு) சொல்ல வேண்டும். மையம் என்றால் இந்த மய்யத்தை சொல்லவில்லை. நாட்டின் மையம் அங்கேதான் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள்தான் மய்யம் என்று நம்புபவன் நான்.

பன்முக தன்மை

இங்கே தர்க்கரீதியான சிந்தனை அனைவருக்கும் உண்டு. அதற்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை. அதற்கு பெரிய உதாரணம் பெரியார்தான். இன்று அதிகமாக இளைஞர்கள் வாசிப்பது பெரியார் எழுதிய புத்தகங்கள். தர்க்கரீதியான சிந்தனை தமிழர்களுக்கு உண்டு, அந்த மூளையை நீங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இந்தியாவின் பலம் அதன் பன்முக தன்மை. அதை ஒரு வண்ணமாக, ஒரு எண்ணமாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் என்று சொல்கிறபோது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த நாட்டுக்கு தேவை. என்றென்றும் தேவை. அதுவும் இப்போது மிக முக்கியமாக தேவை. அதனால் நான் இங்கே வந்திருக்கிறேன்.

பல முறை என் கருத்தை சொல்லி இருக்கிறேன். திடீர் என்று கருத்து மாற்றம் செய்யவில்லை. அதே கருத்து உடையவர்களுடன் இணைந்திருக்கிறேன். ஆபத்து காலத்தில் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இப்போது ஆபத்துகாலம். அதனால்தான் என்னுடைய வரைகோடுகளை எல்லாம் கடந்து வந்து இங்கே கை குலுக்கி இருக்கிறேன்.

தனி சிந்தனை

இது லாபத்துக்காக வைத்திருக்கும் கூட்டணி அல்ல. அப்படி வந்திருந்தால் எனக்கு விஸ்வரூபம் படம் பிரச்சினை வந்தபோதே நான் வந்திருக்கலாம். அது எனது தனிப்பட்ட பிரச்சினை. இப்போது நான் வந்திருப்பது நாட்டுக்கான பிரச்சினை. அதனால் இங்கே வந்திருக்கிறேன். என்னைப்போல் நீங்களும் முன்வந்து கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு தனி சிந்தனை உள்ள நாடு என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் நிரூபிக்க வேண்டும். அதற்கான அரிய வாய்ப்பினை காலமும் கழகமும் வழங்கி இருக்கிறது.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

அவருடன் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்தார்.

கமல்ஹாசன் வருகையையொட்டி அவர் பேசிய இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்து உற்சாகமாக வரவேற்றனர்.


Related Tags :
Next Story