மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கொலையில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கொலையில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் ஆட்டோ பாலா என்ற பாலமுருகன் (வயது 42). இதே பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 5.9.2017 அன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், விக்ரமின் வீட்டிற்கு வந்தார். அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்த விக்ரமை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குபதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தார்.இந்த வழக்கு மதுரை மாவட்ட 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில் பாலமுருகனுக்கு ஆயுள்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுபத்ரா நேற்று தீர்ப்பளித்தார்.மேலும் இறந்த விக்ரமின் குடும்பத்தினர் இழப்பீடு பெற தகுதியானவர்கள். இதுகுறித்து உரிய தொகையை இழப்பீடாக வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.