குடிநீர் வினியோகம் தடைபட்டதால் காலிக்குடங்களுடன் மக்கள் மறியல்
குடிநீர் வினியோகம் தடைபட்டதால் காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை விரிவாக்க பணிகள்
திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹைவேஸ் காலனி, ராஜா வீதி, காந்தி வீதி, பெரியார் வீதி, அழகர்வீதி, மணிமேகலை வீதி, திரு.வி.க. வீதி, இளங்கோ நகர், வள்ளுவர் வீதி, அம்பேத்கர் வீதி என்று ஏராளமான வீதிகள் உள்ளன. இங்கு 600-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
தற்போது திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மழைநீர் வடிகால் அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும்போது, சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை உடைத்து விடுகிறார்கள்.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
ஆனால் அவற்றை உடனே சரிசெய்யாமல் விட்டுவிடுவதால் சுப்பிரமணியபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகள், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளிட்ட இடங்களுக்கு சில மாதங்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு சில பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்கள்.
ஆனால் ராஜா வீதி, காந்தி வீதி, பெரியார் வீதி, அழகர் வீதி, மணிமேகலை வீதி, திரு.வி.க. வீதி உள்ளிட்ட வீதிகள் மிகவும் குறுகலாக இருப்பதால் அந்த வீதிகளுக்குள் லாரிகள் சென்று குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அந்த பகுதி பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சாலை மறியல்
இதுபற்றி அப்பகுதி பொதுமக்களும், 47-வது வார்டு கவுன்சிலரான அ.ம.மு.க.வை சேர்ந்த செந்தில்நாதனும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்யவும், அதுவரை குடிநீர் கிடைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யவும் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் தலைமையில் நேற்று காலை 9.20 மணி அளவில் சுப்பிரமணியபுரத்தில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
குடிநீர் வினியோகம் தடைபட்டதால் காலிக்குடங்களுடன் மக்கள் மறியல்
பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து, மறியலை கைவிடும்படியும், இந்த பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் கூறி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உதவி போலீஸ் கமிஷனர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.