எடப்பாடி பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்- தி.மு.க. சாடல்


எடப்பாடி பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்- தி.மு.க. சாடல்
x

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது அவரால் மக்களுக்கு சிறு பயனும் இல்லை என தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

சென்னை,

தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"எடப்பாடி பழனிச்சாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா!

பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார். ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிச்சாமியின் காவல்துறை. இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ட மக்கள் பதறினார்கள்.

இந்தக் கொடுமைகள் குறித்து அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக, ஒரு முதலமைச்சர் இப்படிக் கூறியது நியாயமா?

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகள்

பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, கற்பழிக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிச்சாமி.

நீட் தேர்வை அனுமதித்த பழனிச்சாமி

அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளுக்கு காரணமானவர் பழனிச்சாமி. அவர்தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவர். ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவரும் பழனிச்சாமிதானே!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிச்சாமி

பா.ஜ.க.அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிச்சாமியின் அ.தி.மு.க.

3 வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிச்சாமி

எங்கு சென்றாலும், தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் பழனிச்சாமி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

பா.ஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிச்சாமியின் செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல!"

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story