காகித ஆலையில் இருந்து நச்சுக்காற்று வெளியேறாமல் தடுக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு


காகித ஆலையில் இருந்து நச்சுக்காற்று வெளியேறாமல் தடுக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
x

மணப்பாறை அருகே உள்ள காகித ஆலையில் இருந்து நச்சுக்காற்று வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி

மணப்பாறை அருகே உள்ள காகித ஆலையில் இருந்து நச்சுக்காற்று வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள், குறைகள் தொடர்பாக 462 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

இதில் காகிதஆலை பகுதி மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திலீப் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மணப்பாறை தாலுகா மொண்டிப்பட்டி, கு.பெரியபட்டி, சித்தாநத்தம் கிராமங்களில் காகிதஆலையின் 2-வது யூனிட் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் நீர்நிலைகள் மிகவும் மோசமாக மாசடைந்து விட்டது. ஆலைக்கழிவுகளால் நிலம் மாசடைந்துவிட்டது. தற்போது காகிதகூழ் அரைக்கும் யூனிட் நிறுவப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பொதுமக்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே காகிதஆலையில் இருந்து நச்சுக்காற்று வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் நாம் தமிழர் கட்சியின் மாநகர மாவட்ட மகளிர் பாசறை இணை செயலாளர் கிரிஜா தலைமையில் பாசறை நிர்வாகிகள் கொடுத்த மனுவில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொதுமருத்துவமனையில் உள்ள அனைத்து கழிவறைகளிலும் தண்ணீர் வசதி வேண்டும். பூட்டிக்கிடக்கும் கழிவறைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். பல மாதமாக பழுதடைந்துள்ள லிப்ட்டை சரிசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மண் அள்ள அனுமதி

விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில், தொட்டியம் தாலுகா பிடாரமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் வண்டல் மண், களிமண், கிராவல் மண் மற்றும் சவுடு மண் அள்ளிக்கொள்ள விவசாயிகளுக்கு 2 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மண் அள்ள முடிவதில்லை. மேலும் இதற்கு சிலர் இடையூறு செய்வதால் இந்த திட்டம் வீணாகும் அபாயம் உள்ளது. எனவே விவசாயிகள் சுதந்திரமாக மண் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில், திருச்சியில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன்களை மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story