வாலிபரால் தாக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர் சாவு
ஆரல்வாய்மொழி அருகே தார்பாய் மாயமானதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே தார்பாய் மாயமானதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோழிப்பண்ணை உரிமையாளர்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் கீழத்தெருவை சேர்ந்தவர் ஆன்றோ ஜெலஸ்டின் (வயது 49). இவர் அந்த பகுதியில் கோழிப்பண்ணை மற்றும் சிமெண்டு கடையை நடத்தி வருகிறார். மேலும், இவர் குமரி மாவட்ட கறிக்கோழி வளர்ப்போர் விவசாய நலசங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்டு மூடைகளை பாதுகாக்க வைத்திருந்த நீல கலரிலான பிளாஸ்டிக் தார்பாய் மாயமானது. இதேபோல ஒரு தார்பாய் அதே ஊரில் வசிக்கும் மோகன் என்ற சிவசுப்பிரமணிய பிள்ளை (69) என்பவர் வீட்டிலும் உள்ளது. அந்த தார்பாய் தன்னுடையது தான் என்று ஆன்றோ ஜெலஸ்டின் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆன்றோ ஜெலஸ்டினுக்கும், மோகனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
தாக்குதல்
இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி மாலையில் ஆன்றோ ஜெலஸ்டின் அந்த பகுதியில் உள்ள அய்யப்பன் என்பவரின் வீட்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஆன்றோ ஜெலஸ்டினுக்கும், மோகனுக்குமிடையே தார்பாய் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு நின்ற மோகனின் சகோதரி சபீதா என்பவரை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மோகனின் மகன் சங்கர் காசிலிங்கம் அருகில் கிடந்த மரக்கட்டையால் ஆன்றோ ஜெலஸ்டினை தலையில் தாக்கினார்.
சாவு
இதில் பலத்த காயமடைந்த ஆன்றோ ஜெலஸ்டினை சங்கர் காசிலிங்கமே தனது ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் குறித்து மோகன், சங்கர்காசிலிங்கம் (28) ஆகிய 2 பேர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் ஆன்றோ ஜெலஸ்டின் பரிதாபமாக இறந்தார்.
கொலை வழக்காக...
இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர் காசிலிங்கம் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
ஆன்றோ ஜெலஸ்டின் அவரது தார்பாயை நாங்கள் திருடிவிட்டதாக ஊரெங்கும் சொல்லி அவமானபடுத்தி வந்தார். பார்க்கும் இடமெல்லாம் இதை பற்றிதான் பேசினார்கள். சம்பவத்தன்றும் தார்பாய் குறித்து என் தந்தையிடம் தகராறு செய்தார். குழந்தையுடன் நின்ற என் சகோதரியையும் தள்ளி தாக்கியுள்ளார். இதையல்லாம் பொறுக்க முடியாமல் அருகில் கிடந்த சென்ரிங் கட்டையால் அடித்தேன். இதில் ஆன்றோ ஜெலஸ்டின் இறந்துவிட்டார்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.