பெரியதாதம்பாளையம் ஏரிக்கு காவிரி, அமராவதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம்


பெரியதாதம்பாளையம் ஏரிக்கு காவிரி, அமராவதியில் இருந்து  தண்ணீர் கொண்டு வரும் திட்டம்
x

பெரியதாதம்பாளையம் ஏரிக்கு காவிரி, அமராவதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் குறித்து மொஞ்சனூர் இளங்கோ எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கரூர்

முதல்-அமைச்சரிடம் மனு

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், பெரியதாதம்பாளையத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அமராவதி ஆற்றில் இருந்து உபரி நீரை கொண்டுவர வேண்டுமென 30 ஆண்டுகளாக அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெரியதாதம்பாளையம் ஏரிக்கு உறுதியாக தண்ணீர் கொண்டு வருவேன் என கூறினார்.இதையடுத்து மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஒப்புதலோடு, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ க.பரமத்தி ஒன்றியம், பெரியதாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார்.அதன் அடிப்படையில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் வரும் உபரி நீரை பம்பிங் சிஸ்டம் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

சாத்தியக்கூறுகள் ஆய்வு

அதன் அடிப்படையில் அமராவதி ஆற்றில் இருந்து ஆண்டி செட்டிபாளையம் வரை பம்பிங் சிஸ்டம் மூலம் தண்ணீர் கொண்டு வருவது குறித்தும், அதன் பிறகு இயற்கையாகவே நீர் வழித்தடம் பெரிய தாதம்பாளையம் வரை உள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை சார்பில் வரைபடம் மூலம் தண்ணீர் கொண்டு வரும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும் கார்வழியில் அமைந்துள்ள ஆத்துப்பாளையம் அணைக்கு காவிரி ஆற்றில் இருந்து பம்பிங் சிஸ்டம் மூலம் தண்ணீர் கொண்டு வருவது குறித்தும், ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்தி, திருச்சி பொதுப்பணித்துறை (திட்டம் வடிவாக்கம்) செயற்பொறியாளர் அறிவழகன், டி.ஆர்.ஓ. லியாகத், கரூர் ஆர்.டி.ஓ. ரூபினா, புகழூர் தாசில்தார் முருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story