திருத்தணி அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


திருத்தணி அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x

திருத்தணி அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக வெங்கடேசன், விற்பனையாளராக முரளி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம்போல அவர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு அதன் வழியாக கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து கொண்டு, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். அப்போது கனகம்மாசத்திரம் போலீசார் மாமண்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளை ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வெங்கடேசன் மற்றும் போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 96 மது பாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது.

போலீசார் டாஸ்மாக் கடை அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கொள்ளை சம்பவத்தில் மூன்று நபர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடையின் மேலாளர் வெங்கடேசன் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story