பண்ருட்டி நகராட்சியில், பணியில் இருந்து நீக்கியதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
பண்ருட்டி நகராட்சியில் பணியில் இருந்து நீக்கியதை கண்டித்து, ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டி நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் வகையில் நகராட்சியில் ஒப்பந்ததாரராக ஒருவர் செயல்பட்டு வருகிறார். இந்த ஒப்பந்ததாரரிடம் 97 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் 7 பெண்கள் உள்பட 49 பேரிடம் பல்வேறு காரணங்களை தெரிவித்து, நேற்று சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பணியில் இருந்து நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நேற்று காலை 7 மணிக்கு பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தங்களை பணியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தீக்குளிக்க முயற்சி
இதற்கிடையே மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளி நந்தகுமார் என்பவர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு வந்த பண்ருட்டி போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி நகர சபை கமிஷனர் மகேஸ்வரி நேரில் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நகரசபை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு நகரசபை தலைவர் ராஜேந்திரன் மற்றும் கமிஷனர் மகேஸ்வரி, ஒப்பந்ததாரர் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வருகிற 30-ந்தேதி வரை வேலை செய்ய ஒப்பந்த தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.