சரக்கு ஆட்டோ மோதி பள்ளி மாணவன் பலி; படுகாயம் அடைந்த தந்தைக்கு தீவிர சிகிச்சை


சரக்கு ஆட்டோ மோதி பள்ளி மாணவன் பலி;  படுகாயம் அடைந்த தந்தைக்கு தீவிர சிகிச்சை
x

விராலிமலை அருகே சரக்கு ஆட்டோ மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். படுகாயம் அடைந்த தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை

பள்ளி மாணவன்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 48), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி (42). இவர்களுடைய மகன் கனகராஜ் (12). இவன் விராலிமலையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று காலை குழந்தைவேல் தனது மகனை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு விராலூர் அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

டிரைவர் கைது

இதில் குழந்தைவேல் மற்றும் அவரது மகன் கனகராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்த குழந்தைவேலை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து, கனகராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான சரக்கு ஆட்டோ டிரைவர் புதுச்சேரியை சேர்ந்த கோதண்டபாணி (44) என்பவரை கைது செய்தனர்.

விராலிமலை அருகே தந்தையுடன் பள்ளிக்கு சென்ற மாணவன் சரக்கு ஆட்டோ மோதி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story