ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் பதவி உயர்வு பெறுவதா? - முத்தரசன் கண்டனம்


ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் பதவி உயர்வு பெறுவதா? - முத்தரசன் கண்டனம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 31 Dec 2023 2:43 PM GMT (Updated: 31 Dec 2023 2:48 PM GMT)

சைலேஷ் குமார் யாதவுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை முதல்-அமைச்சர் தலையிட்டு திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பொது சுகாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதில் 2018 மே 22 ஆம் தேதி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கடுமையான குற்றம் சுமத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் சட்டமன்றப் பேரவையில்: "ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான் தூத்துக்குடிச் சம்பவம்" என்று விளக்கம் அளித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்ததுடன், காவல்துறையினர் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் போடப்பட்ட சில வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முழு முதல் காரணமாக இருந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட, ஐஜி சைலேஷ் குமாருக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது சட்டத்திற்கும், நீதிக்கும், இயற்கை நியதிக்கும் புறம்பானது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. சைலேஷ் குமார் யாதவுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை முதல்-அமைச்சர் தலையிட்டு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story