ஊடக விவாதங்களில் மீண்டும் பங்கேற்கும் பாஜக..! 30 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு


ஊடக விவாதங்களில் மீண்டும் பங்கேற்கும் பாஜக..! 30 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு
x

கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜனை ஊடக பிரிவின் மாநில பார்வையாளராக நியமித்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் மற்றும் அரசியல் தொடர்பாக ஊடகங்களில் விவாதம் நடத்தப்படுகிறது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். சில சமயம் இந்த வாதங்கள் எல்லை மீறுவதை காண முடிகிறது. ஒருவருக்கொருவர் மரியாதைக்குறைவான வார்த்தைகளால் பேசுவதும் அரங்கேறியிருக்கிறது.

விவாதங்களின்போது, சில கட்சிகள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க ஊடகங்கள் சரியாக வாய்ப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பபடுகிறது.

அவ்வகையில், ஊடக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லை என்று கூறி, ஊடக விவாதத்தில் பங்கேற்பதை தமிழக பாஜக நிறுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதனை அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் மாநில துணை தலைவர் கரு. நாகராஜனை ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக பாஜக சார்பாக பங்கேற்கும் மாநில நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி உள்ளிட்ட 30 நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


Next Story