ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கோரிக்கைகள்

வளர்ச்சி துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள் காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் 2017-ல் வெளியிடப்பட்ட அரசாணையின் படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி அனைவரையும் பணிவரன்முறை செய்ய வேண்டும். பெரிய ஊராட்சிகளை பிரித்து அதிகபட்சமாக 25 ஊராட்சிகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும். வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.

2-வது நாளாக...

முழு சுகாதார திட்ட மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கி அவர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்றுமுன்தினமும், நேற்றும் ஒட்டு மொத்த சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஊராட்சி வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story