தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரிதாபம்:மின்சாரம் தாக்கி விவசாயி பலிவேப்பூர் அதிகாரிகளை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
வேப்பூர் அருகே தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். வேப்பூர் அதிகாரிகளை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பூர்,
மின்சாரம் தாக்கி பலி
வேப்பூர் அருகே உள்ள கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60), விவசாயி. இவர் நேற்று மதியம் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயலுக்கு ஓட்டி சென்றார். அப்போது வயலில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மிகவும் தாழ்வாக சென்ற மின்கம்பி திடீரென அறுந்து அவர் மீது விழுந்து விட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பரமசிவத்தின் குடும்பத்தினர், உறவினர்கள் விரைந்து வந்து பரமசிவம் உடலை பார்த்து கதறி அழுதனர்.
உறவினர்கள் சாலை மறியல்
இதனிடையே மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் பரமசிவம் இறந்து விட்டதாகவும், மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பரமசிவத்தின் உறவினர்கள் விருத்தாசலம்-சேலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
அப்போது உறவினர்கள் கூறுகையில், வயலில் தாழ்வாக சென்ற மின்கம்பியை உயர்த்தி கட்டக்கோரி ஏற்கனவே மின்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருந்தோம். ஆனால் மின்கம்பியை இழுத்து கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. பரமசிவம் இறப்புக்கு மின்சார வாரிய அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு போலீசார், இது தொடர்பாக மின்சார வாரிய உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர், பரமசிவன் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.