ரெயில் விபத்து; ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


ரெயில் விபத்து; ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்ல இருக்கிறார்.

சென்னை,

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரெயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரெயிலும் விபத்துக்கு உள்ளானது. மேலும், சரக்கு ரெயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் குமார் ஜெயந்த், தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகிய 5 பேர் அடங்கிய குழுவினர் இன்று ஒடிசா செல்கின்றனர். விபத்தில் சிக்கியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய இந்த குழுவினர் ஒடிசா செல்ல உள்ளனர்.




Next Story