இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 Jan 2024 2:24 PM GMT (Updated: 7 Jan 2024 2:30 PM GMT)

உயர்ந்த இலக்கை அடைவோம்; முதலீடுகளை ஈர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 100-க்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- " உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகம், தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். ஒரு லட்சம் கோடி டாலர் இலக்குக்கு உலகளவில் பாராட்டு கிடைத்திருப்பது வெற்றிக்கான பயணத்துக்கு உந்துகோலாக அமைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம்; உயர்ந்த இலக்கை அடைவோம், முதலீடுகளை ஈர்ப்போம். தமிழ்நாட்டின் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் முதலீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story