களை கட்டிய மீன்பிடி திருவிழா


களை கட்டிய மீன்பிடி திருவிழா
x

மேலூர் அருகே மேலவளவு கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்து உற்சாகம் அடைந்தனர்.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே மேலவளவு கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்து உற்சாகம் அடைந்தனர்.

மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு கருப்புக்கோவில் பகுதியில் பரம்புமலை அடிவாரத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரம்புகண்மாய் அமைந்துள்ளது. இங்கு விவசாய பணிகள் முடிவடைந்து கண்மாய்க்குள் ஆட்கள் நடந்து செல்லும் அளவுக்கு தண்ணீர் வற்றியவுடன் அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி மீன்களை பிடிக்கும் பாரம்பரிய மீன்பிடி திருவிழா பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அதன்படி மீன்பிடி திருவிழா நடைபெறுவதற்கு முன்பு கண்மாயில் மீன்களை யாரும் பிடிக்காமல் ஊர் கட்டுப்பாட்டுடன் இருந்துவந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மீன்பிடி திருவிழா நடைபெறும் தேதி முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. நத்தம், சாணார்பட்டி, கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி, சேக்கிபட்டி, சாணிபட்டி, கம்பூர், பட்டூர், ஆலம்பட்டி, கற்பூரம்பட்டி, கண்மாய்பட்டி, கருங்காலக்குடி, குன்னாறம்பட்டி, மங்களாம்பட்டி, வஞ்சிநகரம், கச்சிராயன்பட்டி, பால்குடிபட்டி, சத்யபுரம், தும்பைப்பட்டி, அட்டபட்டி, பூதமங்கலம், கீழையூர், சருகுவலையபட்டி, அய்யர்பட்டி, சுக்காம்பட்டி, அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, கிடாரிப்பட்டி, சம்பிராணிபட்டி, அ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், அக்ரகாரம்சுந்தராஜன்பட்டி, சூவாஞ்சான்பட்டி, ஆத்துக்கரைப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானனோர் பேர் குடும்பத்தினருடன் பரம்புக்கண்மாய் கரையிலும், கருப்புக்கோவில் பகுதியிலும் முன்கூட்டியே வந்து இரவில் தங்கியிருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக கண்மாய் கரையில் பிரகாசமாய் வெளிச்சம் தரும் மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இரவில் படுத்திருந்த பொதுமக்கள் அதிகாலை 3 மணியளவில் மீன்களை பிடிக்க கச்சா, வலைகளுடன் விடிவதற்குள் மீன்பிடிக்க தயாராகினர். இதனையடுத்து கிராம பாரம்பரிய வழக்கப்படி சாமி கும்பிட்டு மீன்களை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

கோலாகலம்

இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் கண்மாய் தண்ணீரில் ஆயிரக்கணக்கானோர் வலைகளுடன் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். விரால், ரோகு என பலவகை பெரிய மீன்களும், கெண்டை, சிலேப்பி என நாட்டு வகை மீன்களையும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் பிடித்து சென்றனர். அவ்வாறு பிடிக்கும் மீன்களை விற்பனை செய்வது தெய்வ குற்றம் என கூறுவதால் வீடுகளில் சமைத்து சாமிக்கு படையலிட்ட பின்னர் குடும்பத்தினருடன் மீன் குழம்பு தயார் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் மேலூர் சுற்றுவட்டார கிராமங்களில் மீன்குழம்பு வாசனை கம கமத்தது


Related Tags :
Next Story