படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய மீனவரின் கதி என்ன?


படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய மீனவரின் கதி என்ன?
x

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் கடலில் மூழ்கினார். அவரது கதி என்னவென்று தெரியாமல் தேடும் பணி தீவிரமாக நடந்தது.

கன்னியாகுமரி

புதுக்கடை:

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் கடலில் மூழ்கினார். அவரது கதி என்னவென்று தெரியாமல் தேடும் பணி தீவிரமாக நடந்தது.

தொடரும் சோகம்

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேங்காப்பட்டணத்தில் தூத்தூர், இனயம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க வசதியாக மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால் துறைமுக முகத்துவாரப் பகுதியில் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் என்ற மீனவர் முகத்துவாரப் பகுதியில் படகு கவிழ்ந்து பலியானார்.

மீனவர்கள் போராட்டம்

இதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தொடங்கினர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் மாயமானார். இதுகுறித்த விவரம் வருமாறு:-

இனயம்புத்தன்துறையை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது67), மீனவர். இவர் நேற்று காலை 7 மணியளவில் என்ஜின் இல்லாத சிறிய பைபர் படகில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றார்.

பின்னர் மீன்பிடித்து விட்டு மதியம் துறைமுகத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். முகத்துவாரப் பகுதியில் வந்த ேபாது மணல் திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது. இதில் அமல்ராஜ் கடலுக்குள் விழுந்து அலையில் சிக்கி தத்தளித்தார்.

தண்ணீரில் மூழ்கினார்

அப்போது அந்த வழியாக வந்த படகுகளில் இருந்த மீனவர்கள் அவரைக் காப்பாற்ற அமல்ராஜை நோக்கி கயிறுகளை வீசி எரிந்தனர். ஆனால் கயிறு அவர் கையில் சரியாக பிடிபடவில்லை. இதனால், அவர் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

இதைபார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சக மீனவர்கள் படகுகளில் சென்று மாயமான அமல்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் துறைமுக பகுதியில் குவிந்தனர். மாயமான மீனவரின் கதி என்னவென்று தெரியாமல் அவர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

துைறமுக முகத்துவார பகுதியில் நேற்றும் படகு கவிழ்ந்து மீனவர் மூழ்கியதையடுத்து அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Next Story