சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின பெரும்பாலான இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை:  சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு;  4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின  பெரும்பாலான இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x

சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சரபங்கா நிதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

சேலம்

சேலம்,

பரவலாக மழை

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் சேலம், எடப்பாடி, சங்ககிரி, தம்மம்பட்டி என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேவூர் அருகே சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 4 தரை பாலங்கள் தண்ணீரில் முழ்கின. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. மேலும் வருவாய் துறையினர் பல்வேறு இடங்களில் தடுப்பு பேனர் வைத்து எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சங்ககிரி தாசில்தார் பானுமதி, தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் தலைமையில் வருவாய் துறையினர் தண்ணீரில் முழ்கிய தரை பாலங்கள் வழியாக செல்ல தடை விதித்து அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தனர்.

அணைமேடு நீர்வீழ்ச்சி

ஏற்காட்டில் இருந்து டேனிஷ்பேட்டை வழியாக வரும் மழைநீர் சரபங்கா ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைமேடு பகுதியில் வெள்ள பெருக்கை கட்டுப்படுத்த நதியின் பக்கவாட்டில் சுமார் 500 மீட்டர் நீளமும், 30 அடி உயரமும் கொண்ட கலுங்கு உருவாக்கப்பட்டுள்ளது. சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இந்த கலுங்கு வழியாக தண்ணீர் விழுவதை அந்த பகுதி மக்கள் கண்டு ரசிப்பார்கள். மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று அணைமேடு நீர்வீழ்ச்சி பகுதியை பார்வையிட்டார்.

தாரமங்கலம் ஏரியில் இருந்து வெளியேரும் உபரிநீரும், மழைநீரும் கலந்து ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்து நின்றது. தாரமங்கலம் ஏரி நிரம்பியதால் அங்கிருந்து பவளத்தானூர் ஏரிக்கு செல்லும் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் தாரமங்கலத்திலிருந்து ஓமலூர் செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு

மேலும் மேட்டூரில் மலைப்பகுதியில் சில இடங்களில் பாறைகள் சரிந்து விழுந்தன. இதுதவிர நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக நடுவனேரி பகுதியில் இருந்து பொன்னி ஆற்று பகுதிக்கு செல்லும் மழை நீர் மகுடஞ்சாவடி ஊராட்சி உலகப்பனூர் குடியிருப்பு பகுதியில் வீடுகளை சூழ்ந்து நின்றது. இதனால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

எடப்பாடி பகுதியில் பருத்தி, கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் சேதம் அடைந்தன. குரும்பப்பட்டி, ரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பல ஏக்கர் பரப்பளவில் சோளம், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 63 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சங்ககிரி-54.2, தம்மம்பட்டி-37, மேட்டூர்-30.2, ஓமலூர்-28.4, ஆணைமடுவு-27, பெத்தநாயக்கன்பாளையம்-22.5, கரியகோவில்-21, ஏற்காடு-15.6, சேலம்-12.2, காடையாம்பட்டி-10, ஆத்தூர்-8.4, வீரகனூர்-5, கெங்கவல்லி-3 ஆகும். சேலத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.


Related Tags :
Next Story