குளந்திரான்பட்டு பெரியகுளத்தில் சமையல் செய்து பெண்கள் போராட்டம்


குளந்திரான்பட்டு பெரியகுளத்தில் சமையல் செய்து பெண்கள் போராட்டம்
x

கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு பெரியகுளத்தில் கட்டுப்பாடு இன்றி மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர். மேலும் பெண்கள் குளத்திலேயே தங்கி சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

மண் அள்ள எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 61 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொதுப்பணி துறைக்கு சொந்தமான பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை நம்பியே இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் பெரிய குளத்தில் மண் குவாரி அமைக்கப்பட்டு மண் அள்ளப்பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தடை விதிப்பு

இந்நிலையில் கொடுக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு மண் எடுத்து வந்ததால் கடந்த 13-ந் தேதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. அதனை தொடர்ந்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பெரிய குளத்தில் உள்ள பொக்லைன் மற்றும் டிப்பர் லாரிகளை வெளியேற்றுவது குறித்து மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் பெரிய குளத்தில் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் மீண்டும் பெரிய குளத்தில் இன்று டிப்பர் லாரியை கொண்டு மண் எடுக்கப்பட்டது. இதையறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் வறண்ட குளத்திலேயே தங்கி சமையல் செய்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story