டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
x

நாயக்கர்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை:

டாஸ்மாக் கடை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டியில் டாஸ்மாக் கடை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை ஊரின் மையப்பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது. மேலும் இதன் அருகில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பள்ளி மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஊரை சுற்றியுள்ள 7 கிராமங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்து மது வாங்கி அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

மேலும் கடையில் மது வாங்கி குடித்து விட்டு அங்கேயே நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியும், அரைகுறை ஆடைகளுடன் டாஸ்மாக் கடையின் அருகில் விழுந்து கிடக்கிறார்கள். இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் முகம் சுழித்து செல்ல நேரிடுகிறது.

பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

எனவே இந்த டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மாற்ற வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் முற்றுகை போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது அரசு அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை மாற்றுவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் இன்று டாஸ்மாக் கடையை பூட்டி, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையறிந்த கந்தர்வகோட்டை தாசில்தார் புவியரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து யாராவது ஒரு அதிகாரி வந்து வாக்குறுதி கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story