தேர்தலில் சரியான தீர்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்; எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை


தேர்தலில் சரியான தீர்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்; எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 14 March 2021 1:23 AM IST (Updated: 14 March 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க.வினர் பக்குவம் இல்லாதவர்கள் என்றும், தேர்தலில் சரியான தீர்ப்பை மக்கள் தங்களுக்கு வழங்குவார்கள் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

பெரிய விஷயம் அல்ல

கேள்வி:- ‘நீட்' தேர்வு நர்சிங் கல்லூரி வரை நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து...

பதில்:- அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் ‘நீட்' தேர்வு தமிழகத்திலே இருக்கக்கூடாது என்பதுதான் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

கேள்வி:- தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளீர்கள், பல இடங்களில் அ.தி.மு.க.வினரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பதில்:- இது எல்லா கட்சியிலும் உள்ளது தான். அ.தி.மு.க.வை மட்டும் குறிப்பிட்டு சொல்ல வேண்டாம். எல்லாருமே ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் வருத்தத்தை தெரிவிக்கின்றார்கள். அது ஒரு பெரிய விஷயம் அல்ல. அனைவரிடமும் பேசி சமாதானப்படுத்துவோம்.

கூட்டணி சாதாரண காரியம் அல்ல

கேள்வி:- ஏற்கனவே, அம்மா உணவகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே கலைஞர் உணவகம் கொண்டுவருவோம் என கூறியது குறித்து...

பதில்:- தெரியவில்லை, அதை நான் படித்துப் பார்த்துதான் கூற வேண்டும். அறிக்கை இன்னும் முழுவதுமாக கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் படித்துப்பார்த்து தான் கருத்து கூற முடியும்.

கேள்வி:- புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணியில் இன்னும் உங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து...

பதில்:- அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு சில கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.க.வினரிடமும், முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமியிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமுகமாக பேச்சுவார்த்தை முடிவடைந்து அ.தி.மு.க. சார்பில் எங்களது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். 

தி.மு.க.வில் கூட பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூட்டணியே அறிவித்தார்கள். கூட்டணி அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.

பக்குவம் இல்லாதவர்கள்

கேள்வி:- கூட்டணியில் இருந்து தே.மு.தி.க., இன்றைக்கு புதிய தமிழகம் வெளியேறியுள்ளனர் அது குறித்து...

பதில்:- புதிய தமிழகம் எங்களுடன் கூட்டணியில் இல்லை. அவர்கள் ஏற்கனவே முறித்துவிட்டு சென்றுவிட்டனர்.

கேள்வி:- தே.மு.தி.க. விலகியது அ.தி.மு.க.விற்கு இழப்பா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வருகின்றதே அது குறித்து..

பதில்:- அவர்கள் பக்குவம் இல்லாத அரசியல்வாதிகள் என்றுதான் கருதுகிறேன். கூட்டணி என்பது அவ்வப்போது ஏற்படுகின்ற சம்பவம். வெளியேறியவுடன் இப்படி நினைத்தவாறு என்று பேசுவது சரியல்ல. அது கூட்டணிக்கும் அழகு அல்ல. கட்சியுடன் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனியாக சென்று நிற்பதில் தவறு இல்லை. ஆனால், ஒரு கட்சி மீது பழி சுமத்துவது தவறு.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கேள்வி:- பா.ம.க.விற்கு கொடுத்த மரியாதை தே.மு.தி.க. கொடுக்கவில்லை என்று கூறுகிறார்களே அது குறித்து...

பதில்:- நானே பேசினேன். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி உள்ளது. வாக்கு வங்கி என்ற ஒன்று உள்ளது. நீங்களே என்ன செய்கிறீர்கள், இவருக்கு 40 சதவீதம், இவருக்கு 36 சதவீதம், இவருக்கு 7 சதவீதம் என நீங்களே பத்திரிக்கையிலும், ஊடகத்திலும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்கு ஏற்றார் போலத்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும்.

தேர்தல் அறிக்கை

கேள்வி:- வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன், தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன் என தி.மு.க. தலைவர் கூறியுள்ளாரே?

பதில்:- நாங்கள் தான் முதன் முதலாக வெளியிட்டோம். தேர்தல் அறிக்கையாக அல்ல மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை தேர்தல் வருவதற்கு முன்பே நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம், அ.தி.மு.க கட்சி. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை அறிவித்து உடன் அமல்படுத்திய கட்சி அ.தி. மு.க., அ.தி.மு.க. அரசாங்கம். தேர்தலுக்காக அல்ல, வறட்சி, புயல், வெள்ளம் போன்றவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யவேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தின, நானும் புயல் வந்தபோது பல்வேறு மாவட்டங்களை பார்வையிட்டபோது விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிப்படையிலே அவர்கள் வாங்கிய பயிர்கடன் ரத்து செய்யப்பட்டது.

கருத்துக்கணிப்பு

கேள்வி:- பெரும்பாலான கருத்துக் கணிப்பில் தி.மு.க. வெற்றிபெறும் என்று தொடர்ந்து செய்தியை வெளியிட்டு வருகிறார்கள்.

பதில்:- நீங்களே தான் கூறிக்கொள்கிறீர்கள். உங்களுக்கு சாதகமான டி.வி. இருந்தால் அதில் நீங்களே போட்டுக்கொள்கிறீர்கள். இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தீர்கள், விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும். எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தோம். 2016-ல் தி.மு.க ஜெயித்த தொகுதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி. அதேபோல நாங்குநேரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த 2 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். அப்போது எல்லா பத்திரிகையிலும் இப்படித்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு 
கிடையாது என்று, பத்திரிக்கையில் வந்த செய்தி பொய்ச் செய்தி என்று முறியடிக்கின்ற விதமாக சட்டமன்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியில் 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 34 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இயக்கம், அ.தி.மு.க இயக்கம்.

அ.தி.மு.க. அறிவிப்பினை பாருங்கள்

கேள்வி:- தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.4-ம் குறைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

பதில்:- அ.தி.மு.க. தேர்தல் அறிவிப்பினை பாருங்கள். அவர்களது அறிவிப்பை முழுமையாக பார்த்த பின்னர் தான் கருத்து வெளியிட முடியும்.

கேள்வி:- தேர்தலில் அ.தி.மு.க. எத்தனை இடங்களை கைப்பற்றும்.

பதில்:- அ.தி.மு.க. பெரும்பான்மையான இடத்தினை கைப்பற்றும். தி.மு.க. 200 தொகுதியை கைப்பற்றும் என்றால், அவர் என்ன ஜோசியமா வைத்துள்ளார். மக்கள் தான் வாக்களிக்கின்றார்கள். மக்கள் அளிப்பதுதான் இறுதியான தீர்ப்பு. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. ஆகவே மக்கள் தான் நீதிபதிகள். இந்த தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள் என்று நங்கள் எண்ணுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story