பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் விமானங்களில் பயணிக்க தடை


பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் விமானங்களில் பயணிக்க தடை
x
தினத்தந்தி 1 Oct 2021 9:51 PM GMT (Updated: 1 Oct 2021 9:51 PM GMT)

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத், 

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் நமது அண்டை நாடான பாகிஸ்தானும் ஒன்று. அங்கு 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த அந்த நாட்டு அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இருந்து போதிலும் இதுவரையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 13 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பல்வேறு வழிகளில் மக்களுக்கு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் விமானங்களில் பயணம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் விமான போக்குவரத்து துறை மந்திரி குலாம் சர்வார் கான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘அக்டோபர் 1-ந்தேதி (நேற்று) முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மட்டுமே பாகிஸ்தானுக்குள் உள்நாட்டு விமான பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்’’ என தெரிவித்துள்ளார். விமானங்களின் பயணம் செய்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் தடுப்பூசி போடவேண்டாம் என டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்ட நோயாளிகள் உரிய மருத்துவ சான்றிதழை காண்பித்து விமானத்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கும், வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Next Story