அமெரிக்க அதிபர் தேர்தல்: ரஷ்யர்களை எச்சரித்ததாக முன்னாள் சிஐஏ தலைவர் தகவல்


அமெரிக்க அதிபர் தேர்தல்: ரஷ்யர்களை எச்சரித்ததாக முன்னாள் சிஐஏ தலைவர் தகவல்
x
தினத்தந்தி 23 May 2017 8:33 PM GMT (Updated: 2017-05-24T02:03:06+05:30)

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் தலைவர் ஜான் பிரென்னன் 2016 ஆம் ஆண்டிலேயே அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யர்கள் தலையிடுவது குறித்து எச்சரித்ததாக கூறியுள்ளார்.

வாஷிங்டன்

ரஷ்யர்கள் அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவாக தேர்தலை திசைத் திருப்ப முயன்றதாக வெளிவந்தத் தகவல்களால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் சர்வதேச உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் தலைவரே ரஷ்யர்களின் தலையீடு பற்றி தகவல் வெளியிட்டிருப்பது மேலும் விஷயத்தை சிக்கலாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இம்மாதம் 9 ஆம் தேதி ரஷ்யர்களின் தலையீடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த கோமியை அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். 

பிரென்னர் ரஷ்யாவின் எஃப் எஸ் பி உளவு அமைப்பின் தலைவரிடம் ரஷ்யர்கள் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவது இருதரப்பு உறவுகளை பாதிக்கும் என எச்சரித்ததாக கூறியுள்ளார். ஜனநாயக கட்சியின் மூத்தத் தலைவர்களின் மின்னஞ்சல்களை உளவு பார்த்தது உட்பட பல உளவு வேலைகளில் ரஷ்யர்கள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் ரஷ்யர்கள் இதை மறுத்து வந்தனர். டிரம்ப் பதவியேற்ற முதல் மாதம் முழுதும் ரஷ்யர்கள் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஏதோ ஒரு வழியில் ஊடுருவி அவரது பிரச்சாரக் குழுவினர் அறிந்தோ அறியாமலோ செல்வாக்கு செலுத்தியதாகவோ தகவல்கள் வெளிவந்தன. பிரென்னன் நாடாளுமன்றக் குழுவின் முன்பு பேசிய போது “ரஷ்யர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் துணிச்சலாக தலையிட்டனர் என்பதையும், எச்சரிக்கை விடப்பட்டப் பிறகும் அதில் ஈடுபட்டு வந்தனர்” என்றும் தெரிவித்தார். ”அமெரிக்க உள்நாட்டு உளவு அமைப்பான எஃப் பி ஐ விசாரிக்கத் தேவையான அளவிற்கு தலையீடுகள் இருந்ததற்கான தகவல்கள் இருந்தன. நான் ரஷ்யர்களுக்கும், பிரச்சாரக் குழுவில் இருந்த ஒரு சில அமெரிக்கர்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து அறிந்திருந்தேன்” என்றார் பிரென்னர். ஆனால் தகவல்கள் ரகசியமானவை என்பதால் மேற்கொண்டு எந்தத் தகவல்களையும் அவர் கூற மறுத்துவிட்டார். 

மைக்கேல் ப்ளின் உட்பட பல டிரம்ப் தேர்தல் குழு ஆலோசகர்கள் ரஷ்யர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் 7 மாத காலத்தில் இத்தொடர்புகள் இருந்ததாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.


Next Story