தீவிரவாத பதிவுகளை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு ஜி-7 நாடுகள் அழுத்தம்


தீவிரவாத பதிவுகளை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு ஜி-7 நாடுகள் அழுத்தம்
x
தினத்தந்தி 26 May 2017 9:41 PM GMT (Updated: 26 May 2017 9:41 PM GMT)

ஜி-7 நாடுகள் எனப்படும் உலகின் முன்னணி தொழில்மய நாடுகள் சர்வதேச அளவில் வலைத்தள இணைப்புகளை வழங்கும் நிறுவனங்களையும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையும் தீவிரவாத பதிவுகளை உடனுக்குடன் நீக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளன.

தோர்மினா

சமீபத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 22 பேர் இறந்தனர். இதன் பின்னர் நடந்து வரும் ஜி-7 மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியன கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களிடம் தீவிரவாத ஆதரவு பதிவுகளை உடனுக்குடன் நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டன.

ஜி-7 நாடுகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “ தீவிரவாதிகள் இணையத்தை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் எதிர்ப்போம். சென்ற ஆண்டுகளில் வலையமைப்பு முக்கிய தொழில்நுட்ப சாதனையாக கருதப்பட்டாலும், அது தீவிரவாதிகளின் வலுவான ஆயுதமாகவும் மாறிவிட்டது”  என்று கூறியுள்ளனர்.

தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவும், பிரஞ்சு அதிபர் மெக்ரானும் இணைய வசதியை அளித்துவரும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். 

ஒரு பிரெஞ்சு பிரதிநிதி கூறுகையில் இரண்டு அமைப்புகளும் விரைவாக தீவிரவாத பதிவுகளை கண்டறிந்து அவற்றை நீக்கி, தீவிரவாத சித்தாந்தம் வெறுப்புணர்வை பரப்புவதை தடுக்க வேண்டும் என்று கூறினார்.


Next Story