பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார் - சித்து நேரில் வாழ்த்து


பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார் - சித்து நேரில் வாழ்த்து
x
தினத்தந்தி 18 Aug 2018 11:30 PM GMT (Updated: 18 Aug 2018 7:55 PM GMT)

பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார். அவருக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான சித்து நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும்தான் மாறி மாறி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி நடந்த தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. அந்தக் கட்சி சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கும் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடந்த பிரதமர் தேர்தலில் இம்ரான்கான் 176 ஓட்டுகளை பெற்று அமோக வெற்றி பெற்று, அந்த நாட்டின் 22-வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் 96 ஓட்டுகளை மட்டுமே பெற்றார். 342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 172 ஓட்டுகளைப் பெற்றாலே அரசு அமைத்து விடலாம் என்கிற நிலையில் அதை விட கூடுதல் எண்ணிக்கையில் இம்ரான்கான் ஓட்டுகளைப் பெற்றார்.

பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், “நாடு மாற்றத்துக்காக ஏங்கித்தவித்து வருகிற நிலையில், அந்த மாற்றத்தை கொண்டு வருவேன், பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்கப்பட்ட பணத்தை கொண்டு வந்து சேர்ப்பேன்” என உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்கும் விழா, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சுமார் 40 நிமிடம் தாமதமாகவே விழா தொடங்கியது.

தேசியகீதத்துடன் தொடங்கிய விழாவில், குரான் வாசகங்கள் வாசிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கானுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது இம்ரான்கான், “பாகிஸ்தான் மீது உண்மையான விசுவாசம் கொண்டு இருப்பேன். எனது கடமைகளை, பணிகளை நேர்மையுடன், திறமையுடன் செயல்படுத்துவேன். எப்போதும் பாகிஸ்தானின் இறையாண்மை, ஒருமைப்பாடு, நலன், வளத்துக்காக பாடுபடுவேன்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பதவிப்பிரமாணத்தின்போது இம்ரான்கான் உணர்வுமயமானவராக காட்சி அளித்தார். ஜனாதிபதி மம்னூன் உசேன் செய்து வைத்த உருது மொழியிலான உறுதிமொழியினை திரும்ப சொல்வதில் தடுமாறினார். பதவி ஏற்றபின்னர் அவர் தனது மூன்றாவது மனைவியும், ஆன்மிக வழிகாட்டியுமான பஸ்ராவுடன் வந்து விருந்தினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து நேரில் கலந்து கொண்டு, இம்ரான்கானை வாழ்த்தினார்.

விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சித்துவை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா வரவேற்று கட்டித்தழுவியதுடன் அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

இந்த விழாவில் இடைக்கால பிரதமராக இருந்த நசிருல் முல்க், நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கைசர், ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, விமானப்படை தளபதி முஜாகித் அன்வர்கான், கடற்படை தளபதி ஜாபர் முகமது அப்பாசி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. யாரும் கைப்பைகள், பர்சுகள், செல்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை.

இந்த விழாவில் இம்ரான்கான் மகன்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள் விழாவில் பங்கேற்க விரும்பியதாகவும், ஆனால் இம்ரான்கான் அவர்களை வரவேண்டாம் என்று கூறி விட்டதாகவும் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்டுஸ்மித் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும், இம்ரான்கான் பிரதமர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இம்ரான்கான் அரசியலுக்கு வந்து 22 ஆண்டுகள் போராடி, இப்போது வெற்றி பெற்று, அங்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற முந்தைய கால சரித்திரத்தை மாற்றிக் காட்டி உள்ளார்.

Next Story