உலகைச்சுற்றி....


உலகைச்சுற்றி....
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 6:57 PM GMT)

வங்காளதேசத்தில் அடுத்த மாதம் 23-ந் தேதி பொது தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.


* வங்காளதேசத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி பொது தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள தேசிய ஒற்றுமை கூட்டணி தேர்தலை ஒரு மாதம் தள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டது. அதனை கருத்தில் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம் தேர்தலை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து, டிசம்பர் 30-ந் தேதி தேர்தல் நடக்கும் என அறிவித்திருக்கிறது.

* ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ராபெரி பழங்களுக்குள் ஊசியிருப்பது கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்தன. இது குறித்து நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட விசாரணையில் 50 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3 இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இதற்கிடையில் கட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் காட்டுத்தீயால் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து இருக்கிறது.

* எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே சக்காரா என்ற இடத்தில் பிரமிட் அருகே ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 12-க்கும் மேற்பட்ட பூனைகளின் மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.


Next Story