ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது - ஐகோர்ட்டு உத்தரவு


ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Feb 2019 6:30 PM GMT (Updated: 18 Feb 2019 6:26 PM GMT)

ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மாலே,

மாலத்தீவில், பண மோசடி வழக்கில் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கைது செய்யப்பட்டார்.
 
மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில், மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலிஹ்யிடம் தோல்வியடைந்தார். இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் பதவி ஏற்றார்.

முன்னதாக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் தனது பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுகளுக்கு சுமார் 15 லட்சம் டாலர்கள் அளவுக்கு முறைகேடாக நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்துல்லா யாமீனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் உள்ள சுமார் 65 லட்சம் டாலர்கள் மதிப்பிலான பணத்தை போலீசார் முடக்கினர். இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபருக்கு எதிராக கடந்த வாரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
 

Next Story