மெக்சிகோவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பலி


மெக்சிகோவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பலி
x
தினத்தந்தி 7 May 2019 11:30 PM GMT (Updated: 7 May 2019 9:49 PM GMT)

மெக்சிகோவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மெக்சிகோ சிட்டி,

அமெரிக்காவின் நெவேடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து, மெக்சிகோவின் மான்ட்டெர்ரி நகருக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் பயணிகள் 10 பேரும், 3 விமான ஊழியர்களும் இருந்தனர். இந்த விமானம் மெக்சிகோவின் மோங்கிலோவா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு விமானங்களை கொண்டு தேடும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில், மெக்சிகோவின் கோகுய்லா மாகாணத்தில் உள்ள ஒகாம்போ நகரில் இரு மலைகளுக்கிடையே அந்த விமானம் விழுந்து தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, மீட்பு குழுவினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு விமானம் முற்றிலுமாக எரிந்த நிலையில் கிடந்ததை கண்டனர்.

விமானம் தரையில் விழுந்த வேகத்தில், அதன் எரிபொருள் ‘டாங்க்’ வெடித்து, தீப்பிடித்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 13 பேரும் தீயில் கருகி இறந்துவிட்டது தெரியவந்தது.

மேலும், அவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாதபடிக்கு முற்றிலும் எரிந்து கரிக்கட்டைகளாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story