‘வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை


‘வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 May 2019 11:30 PM GMT (Updated: 12 May 2019 9:02 PM GMT)

தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்றும், எனவே இப்போதே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கான வரியை ஜனாதிபதி டிரம்ப் பன்மடங்கு உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு மத்தியில் வர்த்தக போர் உருவானது. அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இந்த வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர்.

அத்துடன் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இருதரப்பு பிரதிநிதிகள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நிதி மந்திரிகள் இடையே பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், சீன துணை பிரதமர் லியு ஹி உள்பட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.

அதே சமயம் இருநாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக மீண்டும் சந்திக்கும் என்றும் ஆனால் முக்கிய கொள்கைகளில் சீனா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சீனாவின் மூத்த பிரதிநிதி தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனா, அமெரிக்காவுடன் இப்போதே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டால் உண்டு, இல்லையென்றால் 2020-க்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விடும் என ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் சீனா மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதுகிறேன். அதனால் அவர்கள் பேச்சுவார்த்தையை அடுத்த ஜனாதிபதி தேர்தல் (அடுத்த ஆண்டு) வரை இழுத்தடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

தேர்தலில் ஜனநாயக கட்சி வென்றால், அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் வரை எடுத்து செல்லலாம் என்பது அவர்களின் எண்ணம்.

ஆனால் அவர்களின் ஆசை நிராசையாகும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனென்றால் நான் மீண்டும் ஜனாதிபதியாகப் போகிறேன். அப்போது ஒப்பந்தம் செய்தால் இன்னும் மிக மிக மோசமாகப் போகிறது. இப்போதே ஒப்பந்தம் செய்தால் அவர்களுக்கு நல்லது.

வர்த்தக பேச்சுவார்த்தைகளில் தங்களின் வாக்குறுதிகளை சீனா காப்பாற்றவில்லை, சீனாவில் இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கின்றனர், அதாவது 10% முதல் 25% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால் கூடுதல் கட்டணங்களை வர்த்தகர்கள் தவிர்க்க முடியும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


Next Story