ஈரானில் 17 அமெரிக்க உளவாளிகள் கைது, சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்


ஈரானில் 17 அமெரிக்க உளவாளிகள் கைது, சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 22 July 2019 9:06 AM GMT (Updated: 22 July 2019 9:06 AM GMT)

17 அமெரிக்க உளவாளிகளை கைது செய்துள்ளதாக ஈரானிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் அதனை மேலும் வலுவாக்கும் வகையில் ஈரான் தரப்பிலிருந்து செய்தியொன்று வெளியாகியுள்ளது. அதாவது ஈரானில் அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய உளவு வலைப்பின்னல் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் உளவுப்பிரிவு சிஐஏவை சேர்ந்த 17 பேரை ஈரான் கைது செய்துள்ளதாகவும், அதில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக ஈரானிய மீடியா தகவல்கள் வெளியாகியுள்ளது.

“அடையாளம் காணப்பட்ட உளவாளிகள் ஈரானில் பொருளாதார, அணுசக்தி, உள்கட்டமைப்பு, ராணுவ மற்றும் இணைய துறைகளில் முக்கியமான தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளனர். அங்கு அவர்கள் இரகசிய தகவல்களை சேகரித்துள்ளனர்,” என்று ராணுவ அமைச்சகம் தரப்பில்  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மீடியாவில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மிகப்பெரிய உளவு கட்டமைப்பை உடைத்ததாகவும், இதனால் பல்வேறு நாடுகளில் உளவாளிகள் கைதானார்கள் எனவும் ஈரான் கூறியது. அதன் தொடர்ச்சியாக இப்போதைய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பது தெரியவரவில்லை.

Next Story