ஹாங்காங் போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் அமைதி திரும்பும் - நிர்வாக தலைவர் கேரி லாம் நம்பிக்கை


ஹாங்காங் போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் அமைதி திரும்பும் - நிர்வாக தலைவர் கேரி லாம் நம்பிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 8:13 PM GMT)

பேச்சுவார்த்தை மூலம் ஹாங்காங் போராட்டத்தில் அமைதி திரும்பும் என நிர்வாக தலைவர் கேரி லாம் நம்பிக்கை தெரிவித்தார்.

ஹாங்காங்,

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. முந்தைய போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறைகள் மூண்ட நிலையில், கடந்த சில தினங்களாக அமைதியை வலியுறுத்தி பேரணிகள் நடத்தப்பட்டன.

இந்தநிலையில், “போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், போலீஸ்துறையினருக்கு எதிரான புகார்களை தீர்ப்பதற்கும் உடனடியாக ஒரு தளத்தை அமைப்பேன்” என்று ஹாங்காங்கின் நிர்வாக தலைவரான கேரி லாம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பேச்சுவார்த்தைக்கான ஒரு தளத்தை உருவாக்க உடனடியாக வேலை தொடங்கும். இந்த பேச்சுவார்த்தை பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஹாங்காங்கின் அமைதிக்கு ஒரு வழியை கண்டுபிடிக்க உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.

இதற்கிடையில், ஹாங்காங் போராட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் குறித்து தவறான முறையில் பிரசாரம் செய்வதற்காக சீனா மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்த 2,000-க்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகளை நீக்கியதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story