ஈரான் எண்ணெய் டேங்கர் விவகாரம்: யார் ஆதரவு காட்டினாலும் தடை -அமெரிக்கா


ஈரான் எண்ணெய் டேங்கர் விவகாரம்: யார் ஆதரவு காட்டினாலும் தடை  -அமெரிக்கா
x
தினத்தந்தி 21 Aug 2019 1:11 PM GMT (Updated: 21 Aug 2019 1:11 PM GMT)

சிரியாவிற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் ஈரானிய டேங்கரை ஆதரிப்பவர்களை அமெரிக்கா தடை செய்யும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

வாஷிங்டன், 

ஈரான் நாட்டிலிருந்து, சிரியாவிற்கு செல்லும் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’, கடந்த மாதம் 4-ந் தேதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றது. அப்போது, ஜிப்ரால்டர் போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் ஆகியோர் அந்த கப்பலை தடுத்து நிறுத்தி, ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பலை சிறை பிடித்தனர். 

கப்பலில் இருந்த  28 பேரையும் கப்பலிலேயே சிறை வைத்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். கேப்டன், தலைமை அதிகாரி, 2 ஊழியர்கள் என 4 இந்தியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். மேலும், டேங்கரைக் கைப்பற்ற அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை ஜிப்ரால்டர் அதிகாரிகள் நிராகரித்தனர்.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறியதாவது :-

கச்சா எண்ணெய் சிரியாவுக்கு செல்வதை அமெரிக்கா விரும்பவில்லை, ஏனெனில் அது உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற அமெரிக்கர்களை கொன்ற குட்ஸ் அமைப்பிற்கு செல்கிறது. டேங்கர் இதை மீறி சிரியாவிற்கு சென்றால், 'அதை தடுக்க, எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம், அந்த டேங்கர் சிரியாவிற்கு செல்ல யார் ஆதரித்தாலும், அவர்களையும் அமெரிக்கா தடை செய்யும்’ என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Next Story