போலீசார்-போராட்டக்காரர்கள் இடையே விடிய விடிய மோதல் - ஹாங்காங் மீண்டும் கலவர பூமியானது


போலீசார்-போராட்டக்காரர்கள் இடையே விடிய விடிய மோதல் - ஹாங்காங் மீண்டும் கலவர பூமியானது
x
தினத்தந்தி 25 Aug 2019 11:30 PM GMT (Updated: 25 Aug 2019 9:40 PM GMT)

போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே விடியவிடிய மோதல் நீடித்ததால் ஹாங்காங் மீண்டும் கலவர பூமியாகி இருக்கிறது.

ஹாங்காங்,

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத் தால் ஹாங்காங் குலுங்கியது.

மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வா கம், கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்திவைக் கப்படுவதாக அறிவித்தது.

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அது மட்டும் அல்லாமல், குற்ற வழக்குகளில் சிக்கு பவர்களுக்கு வெளிப்படையான விசாரணை, கலவர குற்றச்சாட்டுக்கு ஆளான ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஹாங்காங்கின் தலைவர் கேரி லாம் ராஜினாமா என போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கைகளை விரிவுபடுத்தி உள்ளனர்.

இந்த போராட்டங்களின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் ஹாங்காங் கலவர பூமியாக மாறியது. எனினும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் அமைதியான முறையிலேயே நடந்தன.

இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு விரைவில் தளம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என ஹாங்காங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் அவரது நம்பிக்கை தற்போது தவடுபொடி ஆகி விட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மாபெரும் வன்முறை வெடித்தது.

மக்கள் தொகை அதிகம் உள்ள குன்டோங் நகரில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். போலீசார் கூட்டத்தினரை அப்புறப்படுத்த முயன்றபோது, அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கற்கள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசி எறிந்த போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர்.

எனினும் போராட்டக்காரர்களை முழுமையாக அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. இரவு நேரத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் குன்டோங் நகரில் திரண்டதால் நிலைமை மோசமானது.

மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட தடுப்புகளை கொண்டு வந்து சாலையில் போட்டு, போக்குவரத்தை முடக்கிய போராட்டக்காரர்கள், தங்களை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராவுடன் கூடிய மின்விளக்குகளை அடித்து, நொறுக்கினர்.

அத்துடன் போலீசார் வீசும் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் மிளகுதூளில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பிரத்யேக முகமூடிகளை அணிந்துகொண்ட போராட்டக்காரர்கள், போலீசார் மீது பெட்ரோல் குண்டு, செங்கல்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

அதே சமயம் போலீசார் போராட்டக்காரர்களை சுற்றிவளைத்து சரமாரியாக தடியடி நடத்தினர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே விடியவிடிய மோதல் நீடித்ததால் அந்ந நகரமே மீண்டும் கலவர பூமியாக மாறியது.

போராட்டம் காரணமாக அங்குள்ள சுரங்க ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு, ரெயில் சேவை முடங்கியது. சாலைகள் முழுவதையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்ததால் சாலை போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

இதற்கிடையில் போராட்டத்தின் போது, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, 10 பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர்.

போராட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 700-க்கும் மேற்பட்டோர் இதுபோன்று கைது செய்யப்பட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வார அமைதியான போராட்டத்துக்கு பிறகு மீண்டும் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறை உருவாகி இருப்பதால் ஹாங்காங்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Next Story