இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது: பாக்.வெளியுறவுத்துறை மந்திரி


இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது: பாக்.வெளியுறவுத்துறை மந்திரி
x
தினத்தந்தி 26 Aug 2019 9:03 AM GMT (Updated: 26 Aug 2019 9:03 AM GMT)

இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது என்று பாக்.வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத், 

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது,  ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயீத் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியடைந்தது. 

இந்த சூழலில், இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம், மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவித்தது, மோடியின் காஷ்மீர் கொள்கையை ஆதரித்தது போல உள்ளதாக பாகிஸ்தானில் பேச்சுகள் எழுந்தன.  அமீரகத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் பாகிஸ்தான் அரசுக்கு, இந்த விவகாரம் பெரும் தர்மசங்கடத்தை அளித்தது. 

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷி கூறியதாவது:-  ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை மந்திரியை விரைவில் நான் சந்திக்க உள்ளேன். 

இந்த சந்திப்பின் போது காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து அவரிடம் பேசுவேன். ஐக்கிய அரபு அமீரகத்துடன் பாகிஸ்தானுக்கு நல்லுறவு உள்ளது. உண்மை நிலவரங்களை நான் அவர்களிடம் அளிக்கும் சமயத்தில், பாகிஸ்தானை அவர்கள் அதிருப்திக்குள்ளாக்க  மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  எந்த ஒருநாட்டுக்கும் தங்கள் விருப்பப்படி பிற நாடுகளுடன் இரு தரப்பு உறவை  பேணுவதற்கு முழு உரிமை உள்ளது. சர்வதேச உறவுகள் என்பது மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. முதலீடுகள் தொடர்பாக இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் நல்லுறவை கொண்டுள்ளன” என்றார். 

முன்னதாக, பாகிஸ்தானின் செனட் சேர்மன் சாதிக் சன்ஜ்ரானியின் ஐக்கிய அரபு அமீரக பயணம், பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் ஆக. 25 முதல் 28 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்வதாக சாதிக் சன்ஜ்ரானியின் திட்டம் இருந்தது. 

Next Story