வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்


வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Sep 2019 12:00 AM GMT (Updated: 23 Sep 2019 9:06 PM GMT)

வெளிநாட்டை சேர்ந்த 5 குடும்பங்களையாவது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு சுற்றுலாவாக அனுப்பி வைக்குமாறு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஹூஸ்டன், 

அமெரிக்காவில் ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதில் முக்கிய நிகழ்வாக ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் இணைந்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். குறிப்பாக ஹூஸ்டனில் அமைக்கப்படும் காந்தியடிகள் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், சித்தி விநாயகர் கோவில் ஒன்றையும் அவர் திறந்துவைத்தார்.

பின்னர் அங்கு குழுமியிருந்த இந்தியர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனக்காக நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா? இது ஒரு சிறிய வேண்டுகோள். உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களுக்கு நான் இதை சொல்கிறேன். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 5 வெளிநாட்டு குடும்பங்களையாவது இந்தியாவுக்கு சுற்றுலா அனுப்ப வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு முடிவு எடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

 இதைப்போல ஹூஸ்டனில் அமைய இருக்கும் காந்தியடிகள் அருங்காட்சியகம் குறித்து மோடி கூறும்போது, ‘இந்த காந்தியடிகள் அருங்காட்சியகமானது ஹூஸ்டனில் மதிப்புமிக்க கலாசார மைல்கல்லாக இருக்கும். இந்த திட்டத்துடன் சில காலம் நானும் இணைந்து செயல்பட்டேன். காந்தியடிகளின் சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புவதற்கு நிச்சயம் இந்த அருங்காட்சியகம் உதவிகரமாக அமையும்’ என்று தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் சந்திப்பு நிகழ்ச்சியை உருவாக்கியதற்காக ஹூஸ்டன் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றியும் தெரிவித்தார்.

இந்த தகவல்களை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளது.


Next Story