தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது


தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது
x
தினத்தந்தி 25 Sep 2019 1:56 AM GMT (Updated: 25 Sep 2019 1:56 AM GMT)

தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது.

நியூயார்க்,

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அமெரிக்காவில் சென்றிறங்கிய பிரதமர் மோடியை இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.  அங்கு அவருக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அவர்கள் பிரதமர் மோடியிடம் தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.  பிரதமருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

இதன்பின்பு பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் சார்பில் குளோபல் கோல்கீப்பர் விருது இன்று வழங்கப்பட்டது.

இந்த விருது பெற்று கொண்ட பின் பிரதமர் மோடி பேசும்பொழுது, எனக்கு வழங்கப்பட்ட இந்த கவுரவம் என்னுடையது இல்லை.  தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா கனவு திட்டத்தினை செயல்படுத்தி வருவதுடன் அதனை நிறைவேற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களையே சாரும் என்று கூறினார்.

கடந்த 5 வருடங்களில் 11 கோடிக்கும் கூடுதலான கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன.  இந்த நாட்டின் ஏழை மக்கள் மற்றும் பெண்களுக்கு பலனளிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்தது.

இந்தியாவில் கிராமப்புற சுகாதாரம் மேம்பட்டு உள்ள நிலையில், குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் குறைந்துள்ளன.  பெண்களின் உடல் எடையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது என்று பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

Next Story