ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் புகை


ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் புகை
x
தினத்தந்தி 16 Dec 2019 10:37 PM GMT (Updated: 16 Dec 2019 10:40 PM GMT)

ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் புகை உருவானது. அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து பெர்த் நகருக்கு குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் ‘ஏர்பஸ் ஏ330’ ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 271 பயணிகள் இருந்தனர்.

புறப்பட்டு சென்ற 20 நிமிடத்துக்கு பிறகு விமானத்தில் விமானிகளின் அறைக்குள் திடீரென புகை உருவானது. என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அந்த அறை முழுவதும் புகை சூழ்ந்தது. இதுபற்றி தெரியவந்ததும் பயணிகள் மத்தியில் பெரும், பதற்றமும் பீதியும் உருவானது.

இதையடுத்து, விமானி உடனடியாக விமானத்தை சிட்னி விமான நிலையத்துக்கு திருப்பினார். அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விமானத்தின் 2 புறமும் அவசர கால கதவுகள் திறக்கப்பட்டு அது வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

பீதியில் இருந்த பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு வெளியேற முயன்றதில் சிலருக்கு கை, கால்களில் லேசான சிராய்ப்புகள் ஏற்பட்டன. எனினும், விமானி சாதுரியமாக செயல்பட்டு, சரியான நேரத்தில் விமானத்தை தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story