சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 41 பேர் பலி: மேலும் 237 பேர் உடல்நிலை மோசம்


சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 41 பேர் பலி: மேலும் 237 பேர் உடல்நிலை மோசம்
x
தினத்தந்தி 25 Jan 2020 3:43 AM GMT (Updated: 25 Jan 2020 9:26 PM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,287 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. அதில் 237 பேரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் உகான் நகரில் கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்குதல் தொடங்கி, மற்ற நகரங்களுக்கும் வேகமாக பரவி வருவதால் அங்கு ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் பெரிய நகரமான ஷாங்காய் பொது சுகாதார பாதுகாப்புக்கான முதல் நிலை அவசரநிலையை பிறப்பித்துள்ளது.

பெய்ஜிங், ஹுபெய், ஹுனான், ஷெஜியாங், அன்ஹுய், காங்டாங் ஆகிய மாகாணங்களிலும் வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது உகான் நகரில் இருந்து மற்ற நகரங்களுக்கு பயணிப்பவர்கள் மூலமாகவே பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

உகான் நகரில் முதல்முறையாக ஒரு டாக்டர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று காலை பலியாகி உள்ளார். அவரது பெயர் லியாங் வுடோங் (வயது 62). காது, மூக்கு, தொண்டை நிபுணர். 15 மருத்துவ ஊழியர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என ஒரு டாக்டர் தெரிவித்தார்.

போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ள உகான் நகருக்கு சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் 1,230 மருத்துவ ஊழியர்களை அனுப்பியுள்ளது. இவர்கள் தவிர ராணுவத்தின் மருத்துவ ஊழியர்கள் 450 பேரும் நேற்று முதல் உகான் நகரில் மருத்துவ பணிகளை தொடங்கினர்.

தேசிய சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்ட தகவலில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். 1,287 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் எண்ணிக்கையை தாண்டுவது இதுவே முதல் முறை. அவர்களில் 237 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். இதுதவிர 1,965 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகான் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதால், ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு ஆஸ்பத்திரி கட்டப்பட்டு வருகிறது. 25 ஆயிரம் சதுர மீட்டரில் இந்த ஆஸ்பத்திரியை 10 நாட்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கட்டுமான தொழிலாளர்களுக்கு மூன்று மடங்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 3-ந் தேதி இந்த ஆஸ்பத்திரி தயாராகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உகான் நகரில் மேலும் ஒரு ஆஸ்பத்திரி 1,300 படுக்கை வசதியுடன் கட்டப்படும் என நேற்று சீன அரசு அறிவித்தது. இந்த ஆஸ்பத்திரி 15 நாட்களில் கட்டிமுடிக்கப்படுகிறது.

உகான் நகரில் ஏற்கனவே போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நேற்று மேலும் 5 நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஹுபெய் நகரில் 18 நகரங்களின் சில பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து தடையால் சுமார் 5½ கோடி பேர் முடங்கி உள்ளனர்.

இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சீன ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஹாங்காங் நகரில் 5 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 4 பேர் புதிய அதிவேக ரெயில் மூலம் சீனாவில் இருந்து வந்தவர்கள். சீனாவில் இருந்து மக்கள் வருவதை குறைக்க வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்று சில மருத்துவ நிபுணர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதையொட்டி நகர தலைவர் கேரி லாம் நேற்று சுகாதார அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் சுகாதார அவசரநிலையை பிரகடனம் செய்தார். தற்போது புத்தாண்டு விடுமுறையில் இருக்கும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து பிப்ரவரி 17-ந் தேதி வரை மூடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

700 இந்திய மாணவர்கள் சீனாவில் தவிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதல் பரவிவரும் சீனாவில், உகான் மற்றும் ஹுபெய் மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உகான், ஹுபெய் மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்துவரும் 700-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இன்னும் அங்கேயே முடங்கி உள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுடன் நேரடி தொலைபேசி தொடர்பு (ஹாட்லைன்) மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.


Next Story