‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி’ - டிரம்புக்கு புதிய கவுரவம்


‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி’ - டிரம்புக்கு புதிய கவுரவம்
x
தினத்தந்தி 25 Jan 2020 9:50 PM GMT (Updated: 25 Jan 2020 9:50 PM GMT)

கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற புதிய கவுரவத்தை டிரம்ப் பெற்றார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு 1974-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதில் இருந்து வாஷிங்டனில் ஆண்டுதோறும் ‘வாழ்வுக்கான பேரணி’ என்ற பெயரில் கருக்கலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் அருகே பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற்றபோது, இதற்கு முன் குடியரசு கட்சியின் ஜனாதிபதிகள் யாரும் கலந்து கொண்டதில்லை. ஜார்ஜ் டபிள்யு புஷ் மற்றும் ரொனால்டு ரீகன் ஆகியோர் மட்டும் தொலைவில் இருந்து உரை ஆற்றி இருக்கிறார்கள்.

தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் 2017-ம் ஆண்டு நடந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இதில் பங்கேற்ற முதல் துணை ஜனாதிபதி என்ற கவுரவத்தை வரலாற்றின் பக்கங்களில் பெற்றார்.

47-வது ஆண்டாக நடந்த இந்த ஆண்டின் பேரணி, பொதுக்கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் ஒரு எளிய காரணத்துக்காக இங்கே கூடி இருக்கிறோம். இந்த உலகில் பிறந்த மற்றும் பிறக்காத ஒவ்வொரு குழந்தைக்கும் கடவுளால் கொடுக்கப்பட்ட திறனை பூர்த்தி செய்வதற்காக கூடி உள்ளோம். பிறக்காத குழந்தைகளுக்கு இதுவரை வெள்ளை மாளிகையில் ஒரு பாதுகாவலர் இருந்தது இல்லை” என கூறினார்.

இந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டது அதில் பங்கேற்றவர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற கவுரவத்தை டிரம்ப் பெற்று இருக்கிறார்.

Next Story